×

வேளாண் நிதிநிலை அறிக்கை பற்றி தவறான கருத்துகளுக்கு அமைச்சர் மறுப்பு

சென்னை: வேளாண் நிதிநிலை அறிக்கை பற்றி தவறான கருத்துகளை தெரிவிப்பவர்களுக்கு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2020-21ம் ஆண்டில் வேளாண்மைக்கென ஒதுக்கப்பட்ட நிதி ரூ.11,894.48 கோடி மட்டுமே. கடும் நிதி நெருக்கடியிலும் இவ்வாண்டு ரூ.14,254.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்புஆண்டில் ரூ.6,536 கோடி ஒதுக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.300 கோடி மதிப்பில் கிராமங்களில் இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெயரளவுக்கு ஓரிரு இடங்களில் வழங்கப்பட்டது தவிர ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டும் மீண்டும் அதே திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சென்ற 2022-23ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில், தேனி, திண்டிவனம், மணப்பாறை பகுதிகளில் ரூ.381 கோடி மதிப்பீட்டில் உணவுப் பூங்காக்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உணவுப் பூங்கா என்பது இன்று விதைத்து நாளை முளைக்கும் செயல் அல்ல. நிலம் கையகப்படுத்துதல் முதல் பொதுக்கட்டமைப்பை உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது வரை நீண்ட காலம் பிடிக்கும் ஒரு செயலாகும்.இத்திட்டத்தினை விரைவில் செயல்படுத்தும்வகையில், இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நபார்டு வங்கியின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது. சிறுதானியங்களுக்காக ரூ.82 கோடியும், முருங்கைக்கு ரூ.11 கோடியும், தக்காளிக்கு ரூ.19 கோடியும், வெங்காயத்திற்கு ரூ.29 கோடியும், சவ்சவ், பட்டாணி, பீன்ஸ்க்கு ரூ.2.5 கோடி, பாரம்பரிய காய்கறி உற்பத்திக்கு ரூ.1.5 கோடி என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் நேரடியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்ணீர்ப் பாசனத்திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் போன்ற திட்டங்களில் கிட்டத்தட்ட ரூ.1000 கோடிக்கும் மேல் ஒதுக்கப்பட்டு காய்கறி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, காய்கறிகள், சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க ஒதுக்கப்பட்ட நிதி மிகச் சொற்பம் என்பது தவறான செய்தி. கடந்த ஆட்சியில் கரும்புக்கு 2016-17 முதல் 2019-20 முடிய டன்னுக்கு ரூ.2,750 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த அரசு கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வகையில், மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையாக ரூ.250 கோடி அதிகரித்துள்ளது. கரும்பு சாகுபடிப் பரப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அரசின் அறிவிப்புகளை உதாசீனப்படுத்தும் வகையில் பி.ஆர்.பாண்டியன் கருத்து கூறியுள்ளார். கடும் நிதி நெருக்கடியிலும், கரும்பின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது அரசின் சாதனையாகும்.

விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க நுண்ணீர் பாசன மானியம் பெறுவதற்கு தற்போதுள்ள அதிகபட்ச பரப்பான 5 ஹெக்டரை 10 ஹெக்டராக உயர்த்தவும், ஒரே நிலத்தில் மீண்டும் நுண்ணீர்ப் பாசனம் நிறுவுவதற்கான கால இடைவெளி 7 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை தயார் செய்யும் முன்னர் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அக்கூட்டத்திற்கு வருகை புரிந்த பி.ஆர்.பாண்டியன் வேளாண் கருத்துக் கேட்புக்கூட்டத்தில் எந்தவித ஆக்கப்பூர்வமான கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து விட்டு அல்லது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாத நிலையில், விவசாயமே பார்க்காத நபர் ஒருவர் தற்பொழுது விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வேளாண் நிதிநிலை அறிக்கை பற்றி தவறான கருத்துகளுக்கு அமைச்சர் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Chennai ,Minister of Agriculture ,Agrarian Welfare ,MRK ,Panneerselvam ,Dinakaran ,
× RELATED மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு...